Sunday, November 6, 2016

தி ஹிந்து வுக்கு மறுப்பு

அல்லாஹ்வின் திருப்பெயரால் ..........
   திரு சமஸ் அவர்களே ! தி இந்து நாளிதழின் தீவிர வாசகர்களில் நானும் ஒருவன் .குறிப்பாக நீங்கள் எழுதும் கட்டுரைகளை விரும்பி படிப்பேன் , கடந்த 17.09.2015 அன்று தி இந்து நாளிதளில் இந்திய முஸ்லிம்கள் கொண்டாட சில குரல்கள் எனும் தலைப்பில் தாங்கள் எழுதிய கட்டுரையை வாசித்தேன் , அவற்றின் சில கூறுகள் இஸ்லாம் போதிக்கும்  தத்துவங்களோடு மோதுவதால் இந்த வரிகளை எழுதவேண்டிய கட்டாயம்  எனக்கு ஏற்பட்டது.
             திரு சமஸ் அவர்களே ! இஸ்லாமிய சமூகம் மீது தாங்கள் காட்டும் அக்கறைக்கு சமூகத்தின் சார்பாக முதலில் என்னுடைய நன்றியை பதிவு செய்வேன் .
            நான் மெத்தப்படித்தவன் அல்ல, இருப்பினும் இஸ்லாமிய கூறுகளை ஆரம்பம் முதல் சுமார் 20 ஆண்டுகளாக பயின்று கொண்டும் பயிற்றுவித்துக்கொண்டுமிருக்கும் ஒரு சாதாரண மாணவன் நான் , என்னுடைய குரல் உங்களின் காதுகள் வரை அடையுமா ? அந்தளவு என்னால் கத்தி பேச முடியுமா ?  அவ்வாறு பேசினாலும் அதை ஏற்றுக்  கொள்ளும் மனநிலையில்  தாங்கள் இருப்பீர்களா ? எனக்கு தெரியாது.இருப்பினும் தெளிவு படுத்த வேண்டிய கட்டாயம் எனக்கு இருப்பதால்  தெளிவு படுத்தி விடுகிறேன், ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்.
              தாங்களின் அந்த கட்டுரையில் இந்திய முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது இந்த சூழலில் அது மதம் என்ற பெயரில் சமூகத்தை விட்டு ஒதுங்கி நிற்காமல்,மதத்தில் தீவிரமாக இருக்கிறேன் என்ற பெயரில் மேலும்,மேலும் உள்ளே சென்று பூட்டிக்கொள்ளாமல்  பொது சமூகத்தோடு கலக்க வேண்டும். பொது சமூகத்தோடு கலக்க விடாமல் தடைகளாக இருந்து கொண்டிருக்கும் முல்லாக்களை  புறக்கணிக்க வேண்டும், அதற்கான குரல்கள் மேலும், மேலும் உயர வேண்டும். என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தீர்கள்.                                                                            
               அதற்கு களந்தை பீர் முஹம்மது , கொடிக்கால் சேக் அப்துல்லா.கோம்பை அன்வர் ஆகியோர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டியிருந்தீர்கள் , இவர்கள் இஸ்லாமிய சமூகத்தின் பிரபல எழுத்தாளர்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் இஸ்லாத்தை முறையாக கற்ற அறிஞர்களா என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமுண்டு .
                எனவே தாங்கள் இஸ்லாம் குறித்து அறிவதாக, எழுதுவதாக இருந்தால் அதை முறையாக கற்ற , நன்கு விளங்கிய அறிஞர்களிடமிருந்தும் , அவர்கள் எழுதிய நூல்களிலிருந்தும் அறிய முயலுங்கள், அவர்களையே மேற்கோள் காட்டுங்கள் என்று உங்களை அன்புடன் வேண்டுவேன் .
          இஸ்லாம் என்பது சிலநம்பிக்கைளுக்கும் அந்த நம்பிக்கைகள் சார்ந்து வாழும் வாழ்க்கை முறைக்கும் பெயராகும். இவற்றை இஸ்லாம் கற்றுத்தரும் அதே நேரத்தில் முஸ்லிம்களின் கலாச்சாரமும் , பண்பாடும் பிற சமூகத்தை விட்டு முற்றிலும் மாறு பட்டிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
              நீங்கள் யூதர்களைபோல, கிறிஸ்தவர்களைப் போல இருக்காதீர்கள்  ( நூல் : திர்மிதீ 2695 )  நடை,உடை,பாவனை எதுவும் மாற்று சமுதாயத்தைப் போல அமைந்து விடக் கூடாது ஏனெனில் எவர் எந்த சமுதாயத்தைபோல இருப்பாரோ அவரும் அந்தசமுதாயத்தை சார்ந்தவராகவே  போய் விடுகிறார். ( நூல் : அபூதாவூது 4031 ) என்ற நபியின் கட்டளைக்கிணங்க  முஸ்லிம் சமூகத்தின் வணக்கவழிபாடுகள் முதல்   அவர்களின்  உடை பழக்கம், தலை முடி, தாடி முடி வைத்தல் பழக்கம் வரை ஒவ்வொன்றிலும் ஒருதனி கலாச்சாரத்தை கற்றுத்தரப்பட்டுள்ளது.
            காரணம் , கலாச்சாரத்தை வைத்துதான்  ஒருசமுதாயத்தை  அடையாளம் காண முடியும், அக்கலாச்சாரத்தை மாற்றி விட்டால் நாளடைவில் அந்த சமுதாயமும் காணாமல் போய் விடும் என்பதுதான் வரலாறு .
            காலத்தின் நாலு கால் பாய்ச்சலிலும் , காட்டாற்று வெள்ளம் போன்ற  கலாச்சார சீரழிவுகளுக்கும் மத்தியில் முஸ்லிம் சமூகத்தை தாங்கிப் பிடித்து கொண்டிருப்பது அதன் தனிக்கலாச்சாரமும், அடையாளமும்தான் .
           இந்த அடையாளத்திற்கு பல வகையில் ஆபத்துகள் பல்வேறு வடிவங்களில் தோன்றிக் கொண்டேதான்  இருந்தன ,இருக்கின்றன.
           நான் உங்களுக்கு ஒரு வரலாறை நினைவுபடுத்துவேன்   முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்கா மாநகரில் தமது பிரச்சாரத்தை துவங்கிய போது, மக்காதேசம் சிலை வணக்கத்தில் மூழ்கி இருந்தது. தனி மனிதராக தம்முடைய பிரச்சாரத்தை துவங்கிய முஹம்மது நபியவர்களுக்கு எதிரிகளால்  பல துன்பங்கள் வந்தன , ஆனால் துன்பம் தந்தவர்கள் சளைத்தார்களே தவிர , நபியின், தம் கொள்கை மீதான மலை போன்ற   உறுதியை அவர்களால் அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை . எதிரிகள் தளர்ந்து போய் இறுதியாக ஒரு உத்தியை கையிலெடுத்தார்கள், அதை குர்துபீ என்ற அறிஞர் தமது நூலில் இவ்வாறு  பதிவு செய்கிறார்.
        “ மக்காவைச் சார்ந்த வலீது , ஆஸ், அஸ்வது, உமைய்யா ஆகியோர் நபியிடம் வந்து நாம் இருதரப்பினரும் இவ்வாறு உடன் படிக்கை செய்து கொள்வோம். ஒரு வருடம் நீங்கள் எங்கள் தெய்வங்களை, எங்களது வழிபாட்டுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மறுவருடம் நாங்கள் உங்களின் கடவுளை உங்களது வழிபாட்டு முறைகளை மேற்கொள்வோம் இவ்வாறு தொடர்ந்து செய்தால் நமக்கு மத்தியிலுள்ள மோதல் , இறுக்கம் தளர்ந்து சமாதானம், நல்லிணக்கம்  உருவாகும் என்ற யோசனையை முன்வைத்தார்கள். அதாவது நவீன காலத்து மொழியில் சொல்வதாக இருந்தால் பிறசமூகத்தோடு கலந்து விடுவது , அவர்களின் பள்ளிவாசலுக்கு இவர்கள் செல்வது , இவர்களின் கோயிலுக்கு அவர்கள் வருவது என்று ஒருவருக்கொருவர்  காம்பரமைஸ் செய்து கொண்டு வாழ்வது இதைதான் அவர்கள் முன் வைத்தார்கள். “ சரி ” என்று ஒரு வார்த்தை கூறியிருந்தால் எல்லா  துயரங்களும் அப்போதே தீர்ந்து வசந்தம் பிறந்திருக்கும், ஆனால்  நபியவர்கள் இதற்கு சற்றும் அசைந்து கொடுக்க வில்லை, வரலாற்றில் அழிக்க முடியாத, நீர்த்து போக செய்ய இயலாத ஒரு பிரகடனத்தை,  வந்தவர்களுக்கு மட்டுமல்ல, உலக முடிவுநாள் வரை இவ்வாறான கோரிக்கைகளை, யோசனைகளை முன்வைப்பவர்கள் யாவர்களுக்கும் சேர்த்து சொன்னார்கள்.
             “   நான் கூறும் மார்க்கத்தை ஏற்காது நிராகரிக்கும் வர்க்கத்தினரே ! நன்றாக காது திறந்து கேட்டுக்கொள்ளுங்கள்.நீங்கள் வணங்கும் தெய்வங்களை நான் ஒரு போதும் வணங்குவதில்லை ,நான் வணங்கும் இறைவனை நீங்களும் வணங்குவதில்லை .இனி வருங்காலத்திலும் நீங்கள் வணங்குவதை நான் வணங்கப்போவதில்லை , நான் வணங்குவதை நீங்களும் வணங்கப்போவதில்லை ,உங்களின் பாதை உங்களுக்கு , எனது பாதை எனக்கு .இரு பாதையும் ஒன்றாகுவதற்கு , ஒன்றோடொன்று கலப்பதற்கு சாத்தியமே இல்லை , எனவே இது போன்ற சமாதானத்தையெல்லாம் முன் வைப்பது  அர்த்தமற்றது ,வீணாணது .”
        இந்த வார்த்தைதான் இன்றளவிலும் முஸ்லிம்களை பிற சமூகத்தோடு கலந்து போகாமல் தடுக்கும் தடுப்பணையின் வேலையை செய்து கொண்டிருக்கிறது.
திரு சமஸ் அவர்களே ! நீங்கள் உங்கள் கட்டுரை வாயிலாக முன் வைக்கும் கோரிக்கைக்கும் , அம்மக்கள் நபிக்கு முன் வைத்த கோரிக்கைக்கும் மத்தியில் என்ன வித்தியாசத்தை பார்க்கிறீர்கள் ?
       தாங்கள் தன் கட்டுரையில் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாக உள்ள யோகா,குத்து விளக்கு போன்றவற்றை மறுத்து விடலாம் ,ஆனால் அறிவியல் கண்டு பிடிப்பு சாதனங்களை பயன்படுத்துவதில்  கண்டுபிடித்தவரின் ஜாதி மதத்தை முன் வைத்து அதை யாரும் மறுக்க முடியாது என இரண்டையும் ஒப்பிட்டு எழுதியுள்ளீர்கள் ,  இது இஸ்லாம் வலியுறுத்தும் பிற சமூகத்தோடு ஒப்பாகாதிருத்தல்  எனும் பதத்தை சரியாக விளங்காததை காட்டுகிறது . எது பிற சமூகத்தின் அடையாளமாக, சின்னமாக மாறிப்போகுமோ , எதை செய்தால் செய்தவனை அச்சமூகத்தை சார்ந்தவனாக பார்க்கப்படுமோ அதை செய்வதை விட்டுதான் தடுக்கப்பட்டுள்ளது . ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு சாதனம் அதில் வராது அவ்வளவு ஏன் , பிற மதத்தவர் நடத்தும் கடைகளில் சென்று தேவையான சாமான்களை வாங்குவதிலோ,விற்பதிலோ கூட  எந்த தடையும் கிடையாது .            ஒரு யூதனிடத்தில் தன் உருக்கு சட்டையை அடமானம் வைத்த நிலையில் நபியுடைய மரணம் ஏற்பட்டது என்ற தகவல் இந்த வித்தியாசத்தை விளங்கிக்கொள்ள போதுமானது .
          முஸ்லிம்கள் பிற சமூகத்தின் அடையாளத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறுவதை வைத்து இஸ்லாம் பிற மதத்தவரோடு நல்லிணக்கத்தை மறுக்கிறது என்றும் நீங்கள் பொருள் கொள்ளக்கூடாது .
        முஸ்லிம்கள் தம் அடையாளத்தை தக்க வைத்துக்கொண்டு பிற சமூக மக்களோடு நட்புறவு கொள்வதில் நன்னடத்தை மேற்கொள்வதில் தடையில்லை என்பது மட்டுமல்ல , இஸ்லாம் அதை  மிகவும் வலியுறுத்துகிறது
      முஸ்லிம்கள் மிகப்புனிதமாக கருதும் இடம் பள்ளிவாசல் ,அங்கு  தூர தேசத்திலிருந்து வந்த முஸ்லிமல்லாத மக்களை நபியவர்கள் தங்க வைத்திருந்தார்கள் .
      நபியவர்களை பார்க்க அடிக்கடி வந்து போகும் ஒரு யூத சிறுவன் நோய் வாய்பட்ட போது நபியவர்கள் அவன் வீடு தேடி சென்று நலம் விசாரித்தார்கள்.
    மற்றொரு சந்தர்ப்பத்தில் யாரின் தொந்தரவை விட்டு அண்டைவீட்டுக்கார்ர் பாதுகாப்பு பெற மாட்டாரோ அவர் உண்மையான விசுவாசியாக முடியாது என்றவர்கள் அண்டைவீட்டுக்காரர் முஸ்லிமா  முஸ்லிமல்லாதவரா என பிரித்து பார்க்க கூறவில்லை .
     இன்னும் சொல்லப்போனால் எத்தனையோ மனிதர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு காரணமாக அமைந்தது முஸ்லிம்கள்  அவர்களோடு கொண்டிருந்த நல்ல பழக்க வழக்கமும் , நன்னடத்தையும்தான்.
முஸ்லிம்கள் தம் மதத்தை முன் வைத்து தன்னை சுற்றி  ஒரு முள்வேலி அமைத்து வாழ்ந்திருப்பார்களானால், அல்லது நீங்கள் குறிப்பிட்டது போல மதத்தில் தீவிரமாக இருக்கிறேன் என்ற பெயரில் மேலும்,மேலும் உள்ளே சென்று பூட்டிக்கொண்டு   பொது சமூகத்தோடு கலக்காது இருந்திருப்பார்களானால் உலகின் இவ்வளவு பெரிய பரப்பளவில் இஸ்லாம் வளர்ந்திருக்க சாத்தியமே இல்லை.
     மேலும் தாங்கள் பிற மக்களோடு ஒன்றோடொன்று கலந்திருக்க வேண்டும் என்பதற்கு கொடிக்கால் ஷேக் அப்துல்லாவுடைய கூற்றை மேற்கோள் காட்டி மாமன் ,மச்சான் என கூறிக்கொள்ளும்  அளவுக்கு சமூகம் கடந்து  உறவு வைத்திருந்ததாக குறிப்பிட்டீர்கள் அவ்வாறு முற்காலத்து மக்கள் திருமண உறவு உட்பட குடும்ப உறவை பிற மக்களோடு வைத்திருப்பார்களானால் அது அவர்களின் அறியாமை என்றே கூறுவேன் .குர்ஆன் முன் வைக்கும் இஸ்லாமிய குடும்பவியலிலோ , நபியவர்கள் கற்றுத்தந்த ஒழுக்க நெறிமுறையிலோ பிற சமூகத்துடன் திருமண பந்தம் வைத்துக்கொள்வதற்கு அறவே இடமில்லை ,இது அச்சமுதாய மக்களோடு ஒப்பாகுதல் என்பதை தாண்டி ஒரு படி மேலான குற்றமாகும்.
   மேலும் நீங்கள் இந்து மதத்தை அதன் மத போதகர்களை விட்டு பிரித்துப்பார்ப்பது போல இஸ்லாமிய மதத்தை அதன் அறிஞர்களை விட்டு  பிரித்து பார்க்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளீர்கள், இவ்வாறு இரு சாராரையும் ஒரே தட்டில் வைத்து நிறுத்தது எனக்கு சொல்லெணா வருத்தத்தை தந்தது . இந்து மத பண்டிதர்கள் குறித்து எனக்கு அதிகம் தெரியாது , ஆனால் இஸ்லாமிய அறிஞர்கள் உருவாகும் விதத்தையும் , உருவான பின் அவர்களின் அர்ப்பணிப்பு வாழ்க்கையையும் அறிந்தால் தாங்கள் நிச்சயம் தன் கருத்தை மாற்றிக்கொள்வீர்கள் , இஸ்லாமிய ஆட்சி இருந்தவரை இஸ்லாமிய அறிஞர்களுக்கு அரசாங்கம் ஊதியம் தந்தது, இஸ்லாமிய ஆட்சி இல்லை என்று ஆன பின் கடல் போன்ற இஸ்லாமிய களஞ்சியங்களை பாதுகாத்தல் , அதை சமுதாயத்திற்கு எத்தி வைத்தல் ,  காலமாற்றத்தின் அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொண்டு இஸ்லாமிய  விழுமியங்கள் படி மக்களை வார்த்தெடுத்தல் என்ற பெரும் சுமை அவர்களின் தலை மீது விழுந்தது . உலகம் தெரியாத வர்க்கம் , பழையதை வலியுருத்தும் பழமைவாதிகள் ,நாகரீகம் தெரியாதவர்கள், நவ நாகரீக உலகுக்கு ஒத்து வராதவர்கள்,தீவிரவாதிகள் என்ற அபாண்டங்களையெல்லாம் தாங்க நேரிட்டது . அத்துடன் தன் பொருளாதார சுமைகளும் சேர்ந்து கொண்டன ,வீட்டை பாதுகாக்கும் காவலாளிக்கு கூட பத்தாயிரத்துக்கு மேல் ஊதியம் பேசும் இக்காலத்தில்  மார்க்கத்தை பாதுகாக்கும் இக்காவலாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு ஐயாயிரத்துக்கும்,ஆறாயிரத்துக்கும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது இன்று எத்தனை பேருக்கு தெரியும் ? இவ்வாறான துயரங்களையெல்லாம் இன்முகத்தோடு சகித்துக்கொண்டு இவர்கள் தம் மார்க்கத்திற்கு சேவை செய்கிறார்கள்.
திரு சமஸ் அவர்களே ! இஸ்லாத்தின் பார்வையில் உலமாக்களின் இடத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் ஒரு விஷயத்தை விளங்க வேண்டும் எந்த ஒரு தத்துவத்தையும் வெறும் நூலைக்கொண்டு மட்டும் புரிந்து கொள்ள முடியாது , அதை கற்றுக்கொடுக்க, நடைமுறைப்படுத்திக்காட்ட ஆசான் தேவை , இது இயற்கை விதி , இதனாலேயே இறைவன் வேதத்தை இறக்கியதோடு அதை விளக்கித்தருவதற்காக ஒரு தூதரையும் அனுப்பித்தந்தான் , அந்த தூதரின் பணி வேதத்தை நடைமுறைப்படுத்திக்காட்டி விளக்கித்தருவது , அந்த தூதரின் மறைவுக்குப்பின் வேதத்தை கற்றரிந்த அறிஞர்கள் உலக லாபத்தையெல்லாம் சிந்திக்காமல்  அத்தூதரின்  இடத்தில்  இருந்து அந்த அறப்பணியை தொடர்கின்றார்கள், ஆக இவர்கள் நபியின் வாரிசுகள் , இவர்களின் அர்ப்பணிப்பால்தான் இன்று முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்கின்றார்கள்,இத்தகைய தியாகசீலர்களைத்தான் நீங்கள் புறக்கணிக்க கூறுகிறீர்கள் , அவ்வாறு இஸ்லாத்திலிருந்து மத அறிஞர்களை பிடுங்கி எறிந்து விட்டால் அவரவர் புத்தி காட்டும் கருத்தாக இஸ்லாம் இருந்து விடும் , இறைவன் எதிர்பார்த்த இஸ்லாம் அதனுல் காணாமல் போய் விடும் இது எவ்வளவோ பெரிய ஆபத்திற்கு வழிவகுத்து விடும்
முஸ்லிம் சமூகம் எங்கெல்லாம் தவறுமோ அப்போது அத்தவறை சுட்டிக்காட்டும் பணியைத்தான் அறிஞர்களின் பத்வாக்கள் செய்கின்றனவே தவிர மக்களை அடக்கி ஒடுக்கும் சர்வாதிகார போக்கை அது கையிலெடுப்பதில்லை ,அதனை தவறாக சித்தரிப்பது மிகப்பெரிய வருத்தமே.
மொத்தத்தில் திரு சம்ஸ் அவர்களே  ! தாங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை கொள்வதாக எண்ணி,  தாங்கள் கூறியுள்ள ஆலோசனையைப்பார்க்கும் போது எனக்கு பள்ளி பருவத்தில் கேட்ட கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது .
“ ஒரு ராஜாளி பறவை பறக்க வழி தெரியாமல் ஒரு வீட்டில் வந்து விழுந்து கிடந்தது ,அதன் இயலாத நிலையைப்பார்த்த அவ்வீட்டின் முதியவர் அதை அன்போடு எடுத்து தடவிக்கொடுத்தார் ,அவ்வாறு தடவிக்கொடுத்த போது அதன் நகங்களை கவனித்தார் ,  நன்கு வளைந்து கூர்மையாக இருந்தது, அதன் மீது இரக்கம் கொண்டு பாவம் ” உனக்கு நகம் வெட்டிவிட யாருமில்லை ,உனக்கு மயிர்கள் அதிகம்  வளர்ந்துள்ளன அதை சரி செய்ய யாருமில்லை இதோ நானிருக்கிறேன் ”  என எழுந்து கத்திரிக்கோலை எடுத்து வந்து ஒவ்வொரு நகமாக வெட்டி விட்டார், இறக்கைகளையும் முடி வெட்டுவது போல வெட்டி திருத்தினார் இறுதியில் அந்த இராஜாளி பறவை பறக்க முடியாமலும் , இரைகளை பிடித்து உண்ண முடியாமலும் இறந்து போனது  இதை அம்முதியவர் அப்பறவையின் மீதுள்ள இரக்கத்தால் இவ்வாறு செய்தார் ,இதே போல தாங்கள் முஸ்லிம் சமூகம் மீது அக்கறை காட்டுகிறீர்கள், இரக்கப்படுகிறீர்கள் ,அத்துடன் இஸ்லாத்தின் கோட்பாடுகளையும் நன்குணர்ந்து செயல்படுவீர்களானால் அதுவே நலன் பயக்கும் இரக்கமாக இருக்கும்.
எனவே திரு சமஸ் அவர்களே ! முஸ்லிம்கள் பிற சமூகத்தோடு ஒப்பாகிப்போகாமல் தன் அடையாளத்துக்குள் நிற்பது உங்களுக்கு கூரிய நகங்களாக தெரியலாம் , இஸ்லாமிய சமூகம் தன் அறிஞர்களை தூதரின் வாரிசுகளாக பார்க்கும் பார்வை உங்களுக்கு தாறுமாறாக வளர்ந்த இறக்கைகளாக தெரியலாம் , ஆனால் தயவு செய்து அந்நகங்களையோ  , இறக்கைகளையோ வெட்ட மட்டும் முயற்சிக்காதீர்கள் , அது அதன் உயிரையே கேள்விக்குறியாக்கி விடும் .
    பொது சமூகத்தோடு கலந்து போகுதல் , மத நல்லிணக்கம் பேணுதல் என்பதன் பொருள் சக மனிதர்களுக்கு  மனிதாபிமான உதவிகளை செய்தல் , துன்பத்தில் உதவுதல் ,சிரித்த முகத்துடன் பேசுதல் ,பழகுதல் என்பதில் உள்ளது என கூறுவீர்களானால் அது மறுக்க முடியாத உண்மை . தன் அடையாளத்தை மறந்து போவதிலும், பிறரின் அடையாளத்தில் மறைந்து போவதிலும் , மார்க்கம் வலியுறுத்திய அம்சங்களில் மென்மை போக்கை கையாளுவதிலும்தான் உள்ளது என நீங்கள் கூற வருவீர்களானால் அதை இஸ்லாமிய சமூகம் ஒரு காலும் ஏற்றுக்கொள்ளாது அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் நாள் வருமானால் அது இஸ்லாமிய சமூகமாக இருக்காது .
                                    முஹம்மது சபியுல்லாஹ் அன்வாரி
               ஆசிரியர் , மதரஸா ஸலாஹிய்யா
               காதர் முஹைதீன் காலேஜ் வளாகம்
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் ,614701
 செல் : 9092030225


No comments:

Post a Comment