بسم الله الرحمن الرحيم
மௌலானா முஹம்மது தகீ உஸ்மானி அவர்கள் மௌலானா முஹம்மது ஷபீஃ ஸாஹிப் (ரஹ்) அவர்களின் கடைசி புதல்வராவார்கள் , இவர்களின் வம்சத்தொடர் ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களை சென்றடைகிறது, ஹஜ்ரத் அவர்கள் ஷவ்வால் 5 ,ஹிஜிரி 1362, ல் - அக்டோபர் 3 ந்தேதி 1943ம் ஆண்டு தேவ்பந்தில் பிறந்தார்கள். 1947 ல் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற போது தன் தந்தையாருடன் பாகிஸ்தானுக்கு ஹிஜ்ரத் செய்தார்கள் .
பாகிஸ்தானில் தாருல்உலூம் கராச்சியில் 1951 ல் சேர்ந்து 1958 ல் மதரஸா கல்வியை பூர்த்தி செய்தார்கள் , 1964 ல் கராச்சி யுனிவர் சிட்டியில் B.A முடித்தார்கள், 1967 ல் அங்கேயே B.L பட்டம் பெற்றார்கள், 1970 ல் பஞ்சாப் யுனிவர் சிட்டியில் M.A Arabic முடித்தார்கள். தான் பயின்ற தாருல்உலூமிலேயே பணி அமர்த்தப்பட்டார்கள்.
இவ்வாறாக துவங்கிய அவர்களின் கல்விப்பணியும் ,சமூக பணியும் இஸ்லாமிய அரசியல் , பொருளாதாரம் , வாழ்வியல் என எல்லா துறைகளிலும் வியாபிக்கத்துடங்கியது.குறிப்பாக இஸ்லாமிய சட்டத்துறையில் உச்சத்தை அடைந்தார்கள்,உலக நாடுகளில் இஸ்லாமிய வங்கிகளை உருவாக்குவதிலும் , அதற்கான ஆலோசனைகள் வழங்குவதிலும் தன்னிகரற்று விளங்கினார்கள். நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார்கள் . உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்கள் , அவர்களின் பயண அனுபவங்களை தொகுத்து جهان ديدة எனும் புத்தக வடிவில் வெளியிட்டார்கள் ,அது மிகப் பெரும் வரவேற்பை பெற்றது , அதில், தான் சென்ற நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களின் நிலைகளை, அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அவர்கள் விவரிப்பதும், இஸ்லாமிய சரித்திரப்புகழ் வாய்ந்த ஆளுமைகளை , இடங்களை அறிமுகப்படுத்துவதும் ,அங்கே தான் கண்ட ஒவ்வொரு காட்சிகளையும் இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு விளக்கித்தரும் போங்கும் படிப்பவர்களின் உள்ளங்களை கவருவது மட்டுமின்றி இஸ்லாம் ,இஸ்லாமியர்கள் குறித்த கவலையையும் , பலத்த சிந்தனையையும் தட்டி எழுப்பி விடுகிறது ,இவ்வாறாக பலரை பிரமிப்பில் ஆழ்த்திய அவர்களது அப்படைப்பின் தமிழாக்கமே இக்கட்டுரைகள் வாயிலாக வாசகர்களுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. அல்லாஹ் இப்பணியை முறையாக செய்வதற்கும் , இதன் மூலம் அவனின் பொருத்தத்தை பெறுவதற்கும் தவ்பீக் செய்வானாக . ஆமீன்
தஜ்லா,புராத் நதிகளின் பிரதேசத்திலே ...
ஸபர் முழுவதும் , ரபீவுல் அவ்வல் மாதத்தின் சில நாட்களும் வெளிநாட்டிலே கழிந்தது,இந்த ஐந்து வார பிரயாணத்தில் கென்யா,தென்ஆப்ரிக்கா , சவூதி அரேபியா , இராக் ஆகிய நான்கு நாடுகளுக்கு செல்ல நேரிட்டது . இப்பயணத்தின் அதிகமான விஷயங்கள் வாசகர்களை மகிழ்விக்கலாம் ,எனவே அதன் சுருக்கமான விவரங்கள் இங்கே தரப்படுகின்றன.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானியின் லாகூர் அடிவருடிகள் கேப்டவுணின் உச்ச நீதி மன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மனுவொன்றை கொடுத்திருந்தார்கள், இங்குள்ள முஸ்லிம்கள் தம்மை பள்ளியிலும் தொழ அனுமதிப்பதில்லை , கப்ருஸ்தானிலும் அடக்கம் செய்ய விடுவதில்லை, தம்மை முஸ்லிம்களே இல்லை என கூறுகின்றார்கள், ஆனால் நாங்களோ முஸ்லிம்கள், இதனால் எங்களுக்கு அவமரியாதை ஏற்படுகிறது , இது குறித்து நாங்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம் ,அந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை முஸ்லிம்கள் எங்களை காபிர் என்று கூறுவதோ,பள்ளிகளை விட்டு கப்ரஸ்தானை விட்டு எங்களை தடுக்கவோ கூடாது என அவர்களுக்கு இடை கால தடை விதிக்க வேண்டும் என அம்மனுவில் கோரியிருந்தார்கள். அந்த நேரத்தில் உச்ச நீதிமன்றம் அது போன்று ஒரு தடையையும் விதித்து விட்டது.
அந்த தடையுத்தரவை உறுதிப்படுத்தும் தருணம் வந்த போது அங்குள்ள முஸ்லிம்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பாகிஸ்தானிலிருந்து ஒரு குழு உதவிக்காக சென்றது, அதில் நானும் இருந்தேன். அல்லாஹ்வின் கிருபையால் அப்போது நீதிமன்றம் தடையுத்தரவை திரும்ப பெற்றுக்கொண்டு முஸ்லிம்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது, அதன் விபரங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்-பலாக் மாத இதழின் முஹர்ரம்,ஸபருடைய பதிப்பில் எழுதிவிட்டேன் .
அதன் பின் காதியானிகள் உச்ச நீதிமன்றத்தில் அசல் வழக்கை தொடர்ந்து விட்டார்கள், அங்குள்ள நீதிமன்ற வழக்கப்படி வாதம், பிரதிவாதம், இரு தரப்பின் எழுத்துவடிவிலான விளக்கங்களில் சுமார் இரண்டு வருடம் ஆகிவிட்டது , இறுதியாக வழக்கை கேட்பதற்காக நவம்பர் முதலாம் தேதி முடிவு செய்யப்பட்டது .
இந்த வழக்கின் பல கட்டங்களை பார்வையிடுவதற்காக பாகிஸ்தானில் ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது.
அந்த சந்தர்ப்பத்தில் கேப்டவுண் முஸ்லிம்கள் ,கமிட்டியாளர்கள் வழக்குக்கு சில நாட்கள் முன்னரே அங்கே சென்று அவர்களுக்கு உதவ வேண்டுமென்றும் , தேவைபட்டால் முஸ்லிம்கள் தரப்பில் சாட்சி சொல்வதற்கு திறமையான சாட்சிகளை ஏற்பாடு செய்யும் படியும் கமிட்டியிடம் கேட்டுக்கொண்டார்கள் , எனவே இங்கிருந்து ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமியா வின் ஏற்பாட்டின் கீழ் மௌலானா ழபர் அஹ்மது அன்சாரியின் தலைமையில் 11 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது அதில் இதை எழுதுபவனும் அடக்கம் .
அக்டோபர் 25 மாலை P.I.A விமானம் மூலம் கராச்சியிலிருந்து புறப்பட்டோம், அபுதாபியில் ஒரு மணி நேர காத்திருப்புக்குப்பின் இரவு 11 மணிக்கு நைரோபி சென்றடைந்தோம், நைரோபியில் இரவு தங்கி விட்டு காலை 7 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் மூலம் மீண்டும் புறப்பட்டோம் , உள்ளூர் நேரப்படி 11 மணிக்கு ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்தோம். அங்கே டிரான்ஸ்வால் ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மௌலானா இப்ராஹிம் மியான் மற்றும் அவருடைய நண்பர்கள் என பலர் எங்களை வரவேற்றார்கள் , ஜூம்ஆ தொழுகை நேரம் நெருங்கி விட்டது , எனவே உபசரிப்பாளர்கள் முடிவு செய்த படி குழு உறுப்பினர்கள் பல பள்ளிகளுக்கு பிரிந்து, பிரிந்து சென்று விட்டார்கள், நான் கிர்க் ஸ்ட்ரீட் பள்ளியில் தொழ வைத்தேன், ஆங்கில மொழியில் சுருக்கமாக பயானும் நடந்தது.
ஜூம்ஆவுக்குப்பின் குழுவினர்கள் யாவரும் மௌலானா இப்ராஹிம் மியானின் வாட்டர்வால் இஸ்லாமிக் இன்ஸிடிட்யூட் மதரஸா சென்றோம். இரவு அங்கேயே தங்கினோம் , அப்போது இன்ஸிடிட்யூட்வுடைய நூலகத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டோம், மௌலானா அவர்கள் இவ்வளவு தூரமான பகுதியிலும் கூட இல்முடைய கிதாபுகளின் ஒரு பெரிய குவியலையே குவித்துள்ளார்கள் தென் ஆப்ரிக்காவிலேயே அநேகமாக தீனுடைய கிதாபுகளின் மிகச்சிறந்த திரட்டு இதுவாகத்தான் இருக்க முடியும்.
அக்டோபர் 27 காலை 10 மணிக்கு ஜோகன்னஸ்பர்கிலிருந்து புறப்பட்டோம், இரண்டு மணி நேர பயணத்திற்கு பின் 12 மணிக்கு கேப்டவுன் விமான நிலையத்தை அடைந்தோம் தென் ஆப்ரிக்காவில் அப்போதுதான் கோடைக்காலம் துவங்கி இருந்தது, இருப்பினும் வானிலை மிக நன்றாக நமக்கு ஓரளவு குளிராகவே இருந்தது. விமான நிலையத்தில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பெரிய அளவில் வரவேற்புக்காக கூடி இருந்தார்கள். எப்போதும் போல இப்போதும் அவர்களின் வழமையான உபசரிப்பு உள்ளங்களில் நீங்காத சுவடுகளை விட்டுச்சென்றது .
நவம்பர் 4ந்தேதி வழக்கு அரம்பித்தது. வழக்கின் முதல் நாள் விசாரணைக்கென கேப்டவுடன் நகரை விட்டு சுமார் 30 மைல் தூரம் தொலைவில் அமைந்த ஒரு நீதிமன்றம் தேர்வு செய்யப் பட்டிருந்தது. அப்படியிருந்தும் இந்த வழக்கின் மீதுள்ள முஸ்லிம்களின் கட்டுக்கடங்காத ஆவலின் காரணமாக அவர்கள் காலையிலிருந்தே அங்கு குழும ஆரம்பித்து விட்டார்கள் விசாரணை ஆரம்பமான போது ஹால் மட்டுமில்லாமல் நடை பாதையிலும் கூட கால்வைக்க இடமில்லாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது .அதனுடன் ஒட்டிய வரண்டாவும் நிரம்பி இருந்தது. ஆரம்பத்தில் முஸ்லிம்கள் தரப்பு வக்கீல் மிஸ்டர் இஸ்மாயில் முஹம்மது அசல் வழக்கை துவங்கும் முன் , இந்த வழக்கை விசாரிப்பது இந்த நீதிமன்றத்திற்கு பொருத்தமில்லை என்ற கருத்திலே வாதாட நீதிபதியிடம் அனுமதி கேட்டார். அதற்கான காரணத்தை நீதிபதி கேட்ட போது அவர்அது குறித்து தன்னுடைய ஆதாரத்தையும் முன் வைத்தார். பின்னர் நீதிபதி எதிர் தரப்பு வக்கீல் மிஸ்டர் பார்லமிடம் அவருடைய கருத்தை கேட்டதற்கு மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில் இந்த தலைப்பில் வாதிட விரும்பினால் தனக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை. ஆனால் சாட்சிகள் இல்லாமல் வெறும் வாதமாக மட்டும் அது இருக்க வேண்டும்.என்று அவர் சொன்னார் இதற்கு நீதிபதி ஆரம்ப கட்ட சட்ட நுணுக்கங்கள் மீதான வாதத்தை கேட்பதா இல்லையா என்பதன் தீர்ப்பை நாளை ஒத்தி வைப்பதாக கூறினார் அத்துடன் நீதிமன்றம் கலைந்தது.
அடுத்தநாள் நீதிபதி மிஸ்டர் முஹம்மது இஸ்மாயிலுக்கு ஆரம்ப சட்ட நுணுக்கங்கள் மீது வாதாடுவதற்கான அனுமதி தரப்படுகிறது ஆனால் அவர் தன் கருத்துக்களை நிரூபிக்க வாதாட மட்டுமே செய்ய வேண்டும்.எந்த சாட்சியத்தையும் கொண்டு வரக் கூடாது என கூறினார் . எனவே மாலை வரை மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில் தன்னுடைய கருத்துக் குறித்து ஆதாரங்களை அடுக்கிக்கொண்டே சென்றார் .அவருடைய வாதம் மாஷா அல்லாஹ் மிக ஆதாரப்பூர்வமானதாக, ஆழமானதாக , குறிப்புகளால் நிரம்பியதாக வசீகரமிக்க பேச்சாற்றலை தாங்கி இருந்தது, அதிலேயே அந்த நாள் கழிந்து விட்டது,நேரம் போனதே தெரியவில்லை.வழக்கு விவரங்களை இவ்வளவு அழகாக தயாரிப்பதும் , பின்னர் அதை கோர்வையாக, உள்ளத்தை கவரும் விதத்தில் எடுத்து வைப்பதும் மிகக் குறைவானவர்களுக்கு மட்டுமே வாய்க்கப்பெறும் திறமையாகும் .
நவம்பர் 6ம் தேதி எதிர்த்தரப்பு வக்கீல் மிஸ்டர் பார்லம் மிஸ்டர் முஹம்மது இஸ்மாயிலுடைய ஆதாரங்களுக்கு பதில் தர ஆரம்பித்தார்,அவர் தன்னுடைய வாதத்தில் பல சட்ட நுணுக்கங்களை எழுப்பினார்,தன்னுடைய தொழில் திறமையை நிரூபித்தவராக மிக நீண்ட நெடிய விளக்கத்தினை தந்தார், அது மாலை 3 மணி வரை தொடர்ந்தது. அதன் பின்னர் மிஸ்டர் இஸ்மாயில் முஹம்மது சுமார் ஒரு மணி நேரம் பதில் உரை ஆற்றினார்.மிஸ்டர் பார்லமின் குற்றச்சாட்டுகளுக்கு வரிக்கு வரி அழகாக பதில் தந்தார் கடைசியில் நீதிபதி இந்த சட்ட நுணுக்கங்கள் மீதான தனது தீர்ப்பை ஒத்தி வைப்பதாக கூற , அத்துடன் நீதி மன்றம் கலைந்தது.
ஆரம்ப இந்த நுணுக்கங்கள் மீதான நீதிமன்ற தீர்ப்பு 1985க்குள் வரலாம் என்பதுதான் இப்போதைய நிலமை, நீதிபதி, மிஸ்டர் இஸ்மாயில் முஹம்மதுடைய கருத்துக்களை ஏற்று இந்த பிரச்சினையில் நீதிமன்றம் தலையிடுவது முறையில்லை என தீர்ப்பளித்தால் காதியானிகளின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். வழக்கு விசாரணைக்கு ஏற்றது என தீர்ப்பு வந்தால் பின்னர் வழக்கு விசாரணை , சாட்சி என நீண்டு கொண்டே செல்லும். ஆக இந்த வழக்கு குறித்த மேலதிகமான விளக்கங்கள் உயிருடன் இருந்தால் முடிந்தால் இன்ஷா அல்லாஹ் வழக்கு தீர்ப்பான பின் கூறப்படும் ஆனால் கேப்டவுனில் நான் தங்கியிருந்த இந்த பதினைந்து நாட்களில் குறிப்பிட வேண்டிய, படிப்பினைக்குறிய, என் உள்ளத்தில் பதிந்து போன விஷயம் இப்பகுதி முஸ்லிம்களிடம் இருந்த அபரிதமான தீனுடைய ரோசம்தான் .
கேப்டவுனை உலகின் கடைசி ஓரம் என கூற வேண்டும் பல நூற்றாண்டுகளாக மேற்கத்தியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த, இடத்திற்கு இடம் தீனுக்கு புறம்பான ஆபாசம் நிறைந்த, ஆடம்பர வாழ்வின் எல்லா காரணிகளும் இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கும் இத்தனை தூரத்தில் அமைந்த இப் பிரதேசத்திலும் கூட இம்முஸ்லிம்கள் தன்னுடைய மத அடையாளங்களை பெரிய அளவில் தாங்கிக்கொண்டு உட்கார்ந்துள்ளார்கள். சிறுபான்மையினராக இருந்தும் கூட தன்னுடைய தீனின் தனித்துவத்தை தக்க வைக்க தம் உயிரை பணயம் வைத்து பாடுபடுகிறார்கள், எப்போதேனும் தீன் சார்ந்த ஏதேனும் அம்சத்திற்கு ஆபத்து வந்திடுமானால் அவர்களுக்கு ஏற்படும் உணர்ச்சி கொந்தளிப்பு காண வேண்டிய ஒன்றாகும் .
இந்த வழக்கின் போது நாட்டின் மூன்று மாகாணங்கள் டிரான்ஸ்வால் , நிட்டால் , கேப் லிருந்து முஸ்லிம்களின் பிரதிநிதிகள் கேப்டவுனில் ஒன்று குழுமி விட்டார்கள் அவர்களில் ஒருவர் பிறருடன் உதவி ஒத்தாசை செய்தல் , ஒத்துழைப்பு தருதல் ஆகிய பெருமைப்படத்தக்க பல பண்புகளை அப்போது கண்கூடாக காண முடிந்தது
அந்த மக்கள் மனத்தூய்மையோடு தீனுடைய அடிப்படையில் பாகிஸ்தானிய குழுவுக்காக மனதையும், கண்ணையும் அற்பனித்து பிரியத்தோடும் , பாசத்தோடும் அவர்கள் நடந்து கொண்ட விதம் நம்மில் ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத நினைவுகளாக மாறிப்போனது .
கேப்டவுன் , உலகின் மிக அழகான இடங்களில் ஒன்றாகும் . இங்கு கடல்கள் , மலைகள் , அருவிகள் , பச்சை பசுமையான மைதானங்கள் என எல்லா வித இயற்கை அழகுகளும் நிரம்பி கிடக்கின்றன , இதே நகரத்தின் தெற்கிலே சுமார் 70 ,80 கிலோமீட்டர் தூரத்தில் பிரபல்யமான வரலாற்று புகழ்வாய்ந்த மேட்டுப்பகுதி இருக்கிறது அதை உர்துவில் راس اميد என்றும் , அரபியில்رأس الرجاء الصالح என்றும் , ஆங்கிலத்தில் cap of good hope என்றும் கூறப்படுகிறது இதுதான் இந்த திசையில் உலகின் மனிதர்கள் வசிக்கும் கடைசி பகுதியாகும் ,இங்கிருந்துதான் வாஸ்கோடகாமா இந்தியாவுக்கான பாதையை கண்டு பிடித்தார் இந்த இடத்தில்தான் உலகின் மிகப்பெரும் கடல்களான அட்லாண்டிக் பெருங்கடலும் , இந்திய பெருங்கடலும் சங்கமமாகி مرج البحرين يلتقيان இரு கடல்களும் ஒன்றையொன்று சந்திக்கின்றன எனும் குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் காட்சியை முன்னிறுத்துகிறது , இதற்கு முன்னரும் இங்கே வந்துள்ளேன் ஆனால் அப்போது மேக மூட்டத்தின் காரணமாக இருகடல்களின் சங்கமம் தெளிவாக தெரியவில்லை ஆனால் இப்போது வானம் தெளிவாக இருந்தபடியால் இரு கடல்களுக்கு மத்தியிலுள்ள வித்தியாச கோடு பல மைல் தூரம் வரை தெளிவாக தெரிந்தது இதையே குர்ஆன் بينهما برزخ لا يبغيان இரு கடல்களுக்கு மத்தியில் ஓர் திரையுண்டு அதை அவை மீறுவதில்லை என கூறுகிறது அக்காட்சியை கண்டதும் மனிதன் தன்னை மறந்து فتبارك الله احسن الخالقين யாஅல்லாஹ் நீ எவ்வளவு மகத்தானவன் , நீயே அழகிய படைப்பாளன் என கத்த தோனுகிறது.
தொடரும்........
-அபூ வஜீஹா அன்வாரி-
No comments:
Post a Comment